ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மணி நேரத்தில் 72 மில்லி மீட்டர் மழை; கோயிலில் புகுந்த மழை நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2024 05:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒரு மணி நேரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பெய்ததால் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் தண்ணீர் புகுந்தது. பெரியகுளம், சோழங்குளம் கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழுந்தது. அத்திகுளம் அருந்ததியர் காலனி குடியிருப்பு ஓடையில் அதிகளவில் மழைநீர் சென்றதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
நேற்று இரவு 10:00 மணி வரை மழை பெய்வதற்கான எந்தவித சூழலும் இல்லாத நிலையில் திடீரென பெய்யத் துவங்கிய சாரல் மழை படிப்படியாக கனமழையாக இரவு 11:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் நகர் பகுதியில் பல்வேறு தெருக்கள் முதல் பஜார் வீதிகள் வரை மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு தொடர்ச்சி தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மம்சாபுரத்தில் உள்ள வாழைக்குளம், முதலியார் குளம், வேப்பங்குளம், இடையன்குளம் கண்மாய்கள் நிரம்பியது. வாழைக்குளம் கண்மாயிலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி நேற்று அதிகாலையில் முதல் மறுகால் விழுந்தது. இதனால் செங்குளம், சோழங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. சோழங்குளம் கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அத்திகுளம் ஓடையில் அதிகளவில் சென்றதால் அப்பகுதி மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் தண்ணீர் தேங்கியதால் அதிகாலை சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பெய்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளது.