பதிவு செய்த நாள்
18
டிச
2024
05:12
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், காணிக்கையாக பெறப்பட்ட, 28 கிலோ, 906 கிராம் பொன் இனங்கள், எஸ்.பி.ஐ., அதிகாரிகளிடம், தங்க பத்திர முதலீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில், ஹிந்துசமய அறநிலையத்துறை, 2021 – 22 மானிய கோரிக்கையின் போது, கடந்த, 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்க தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், வங்கியில் முதலீடு செய்யப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இப்பணிகளுக்காக, ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், மூன்று மண்டலங்களாக பிரித்து, மூன்று குழுக்ககள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், சென்னை உயர்நீதி மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி இருவரும் அந்த குழுக்களுக்கு தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற தங்கத்தை, கோவில் உபயோகத்துக்கு தேவையில்லாத கல் அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி, பொன் இனங்களை தரம் பிரித்து எடை போடும் பணி, கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 28 கிலோ, 906 கிராம் எடை கொண்ட பலமாற்று பொன் இனங்கள், மூன்று பெட்டிகளில் வைத்து இலாகா முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
பிரித்தெடுக்கப்பட்ட பொன் இனங்கள், உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணி கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) துரைசாமிராஜூ தலைமை வகித்தார். அமைச்சர் சேகர்பாபு பொன் இனங்களை, வங்கி மண்டல பொதுமேலாளர் நவீன் டேவிட்ஸ், ஆனைமலை கிளை மேலாளர் பிரேமா, பிராந்திய முதுநிலை மேலாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தார். கோவை இணை ஆணையர் ரமேஷ், சரிபார்ப்பு இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் (சரிபார்ப்பு) விஜயலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தங்க பத்திர முதலீடு செய்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவாயில் சேர்க்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.