பதிவு செய்த நாள்
19
டிச
2024
05:12
வால்பாறை; கோவில்களில் பூஜை செய்யாமல் ஒரு போதும் பூட்டி வைக்கக்கூடாது, வால்பாறையில் நடந்த கிராம கோவில் பூஜாரிகளுக்கான இரு நாள் பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
உடுமலைப்பேட்டை சப்தரிஷிகளின் சர்வசாஸ்திர வித்ய பீடம் சார்பில், எளிய ஆகம துாப தீப ஆராதனை, அர்ச்சனை பயிற்சி முகாம் வால்பாறையில் நடந்தது. வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், கிராம கோவில் பூஜாரிகளுக்காக நடந்த பயிற்சி முகாமிற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நாட்ராயசாமி தலைமை வகித்தார். செயலாளர் குட்டன்திருமேனி, ஆன்மிக ஒருங்கிணைப்பாளர்கள் மருது, ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பேசியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் கோவில்களிலும், தினமும் பூஜை செய்ய வேண்டும். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் அந்தந்த பகுதி கோவில்களில் ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சி நடத்த வேண்டும். ஹிந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மிகவும் பழமையான கோவில்களை கூட கண்டறிந்து, அந்த கோவில்களில் பக்தர்கள் வழிபடும் வீதமாக தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். நலிவடைந்த கோவில்களை கண்டறிந்து, அந்த கோவிகளில் காலை, மாலை நேரங்களில் பூஜை செய்ய வேண்டும். கோவில்களில் பூஜை செய்யாமல் ஒரு போதும் பூட்டியே வைக்கக்கூடாது. இதனால் அந்தப்பகுதியில் தெய்வசக்தி இல்லாமல் போய்விடும். கோவில்களை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் பக்தர்கள் வந்து செல்லும் வகையில் மாற்றியமைப்பது, பூஜாரிகளின் கடமையாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடத்த வேண்டும். சிறிய கோவிலாக இருந்தால் கூட, காலை, மாலை இருவேளையும் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த கிராம கோவில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.