பதிவு செய்த நாள்
24
டிச
2024
11:12
சூலூர்; "மனித சமுதாயத்துக்கு ஆக்கபூர்வமான சக்திகளை கொடுத்து வருவது பழநி மலையும், அங்கு ஆட்சி புரியும் பழனியாண்டவரும் தான்," என, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி இயற்பியல் பேராசிரியர் தமிழ்நாயகன் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார், உறுப்பினர்கள், பல்வேறு ஊர்களை சேர்ந்த காவடி குழுவினர்கள் பங்கேற்றனர். பழநி மலையும், அதன் மகத்துவமும் என்ற தலைப்பில், பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி இயற்பியல் பேராசிரியர் தமிழ்நாயகன் பேசியதாவது: பழநி மலை சாதாரணமான மலை இல்லை. பல மகத்துவங்களை கொண்டது. மலைமீது ஏறி சென்று பழனியாண்டவரை தரிசனம் செய்வது அனைவரின் வழக்கம். ஆனால், நாம் மலை மீது உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தரிசிக்காமல் வந்து விடுகிறோம். காரணம் அவை பற்றி நமக்கு தெரியாதது தான். இனிமேலாவது அந்த இடங்களை அறிந்துகொண்டு அங்கு சென்று தரிசிக்க வேண்டும். பழநி மலை மீது செவ்வாய் கிரகத்தின் கதிர் வீச்சு விழுகிறது. அதேபோல், அருகில் உள்ள ரங்கநாதர் மலை மீது கிருத்திகை நட்சத்திரத்தின் கதிர் வீச்சு உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது.
சிவன் மலைக்கும் சக்தி மலைக்கும் நடுவில் உள்ளது சக்தி வாய்ந்த சிகண்டி பாறை உள்ளது. அதேபோல், மலைக்கொழுந்து அம்மன் கோவில் உள்ளது. அங்குள்ள பாறை மீது சிறிய வேலை வைத்து வழிபட்டு அதை வீட்டுக்கு கொண்டு வந்தால், தீவினைகள் அகலும் என்பது நிதர்சனம். குற வடிவேலர் கோவில் அருகில் குற மரம் உள்ளது. அந்த மரம் இமய மலையில் வளரக்கூடியது. தென்னிந்தியாவில் எங்கும் இல்லை. பழநியில் மட்டுமே உள்ளது. நவபாஷான சிலையை உருவாக்கிய போகரின் குகைகள் நான்கு இடங்களில் உள்ளது. உலகின் முதல் வேதியியல் விஞ்ஞானி ஆன போகர் சென்ற, அமர்ந்திருந்த இடங்களை வழிபட வேண்டும். பிரம்ம தீர்த்தம், சரவணப் பொய்கை உள்ளிட்ட ஐந்து தெப்பக்குளங்கள் உள்ளன. அவற்றில், பிரம்ம தீர்த்தம் மிகவும் முக்கியமானது. அதில், சித்தர்கள் இன்றும் மீன் வடிவில் வாழ்கின்றனர். அனைத்து தெய்வங்கள், தேவர்கள் பாதம் பட்ட இடம் அது. அங்கு சென்று தீர்த்தத்தை பருகினால் நல்லது நடக்கும். எந்தவொரு செயலையும் தொடங்க தைப்பூசம் மிக சிறந்த நாள். ஆண்டவர் உலகத்துக்கே மன்னவன். தெய்வங்களை வழிபடும் போது, மயில் மாதிரி சாந்தமாக இருக்க வேண்டும். வேலின் கீழ் பகுதி அகலமாகவும், மேல் பகுதி கூர்மையாகவும் இருக்கும். அதுபோல் அனைவரும்,பெரிய அளவில் சிந்தித்து, கூர்மையான முடிவை எடுக்க வேண்டும். மனித சமுதாயத்துக்கு ஆக்கபூர்வமான சக்திகளை தருவது பழநி மலையும், அங்கு ஆட்சி செய்யும் பழனியாண்டவரும் தான். இவ்வாறு, அவர் பேசினார்.