ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2024 11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படி அளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன் பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். பின்னர் எல்லா உயிர்களுக்கும் படி அளந்த சிவபெருமானிடம் இன்று நீங்கள் ஒரு உயிருக்கு மட்டும் படி அளக்கவில்லை என்றார். அப்போது பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் எறும்புக்கு அருகில் அரிசிகள் இருந்தது. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் இறைவன் படியளக்கும் வைபவம் சிவன் கோயில்களில் நடப்பது வழக்கம். அதன்படி வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று காலை தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. பின்னர் அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா நடக்கும் போது பக்தர்கள் அரிசி தெளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நேற்று காலை 6:00 மணிக்கு வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து படி அளந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.