பதிவு செய்த நாள்
25
டிச
2024
10:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகள் அடங்கிய காலண்டர்கள் பக்தர்களுக்கு விற்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் நடக்கும் திருவிழாக்கள், பிரதோஷம், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் பக்தர்கள் அறியும் வகையில் மாத காலண்டர் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றன. இந்தாண்டும் ரூ.100க்கு விற்கப்படும் என சில வாரங்களுக்கு முன் கோவில் நிர்வாகம் அறிவித்தது.
அம்மன், சுவாமியின் அலங்கார படங்களுடன் கிடைக்கும் இக்காலண்டரை பெற பக்தர்கள் வெளியூர்களில் இருந்து கூட வருகின்றனர். தற்போது காலண்டர் விற்பனை நடக்கவில்லை. ஸ்டால்களில் கேட்டால் விற்று தீர்ந்துவிட்டதாகவும், இனி அடுத்தாண்டுதான் கிடைக்கும் எனக்கூறுகின்றனர். புத்தாண்டு அன்று வி.ஐ.பி.,க்களுக்கு வழங்குவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் காலண்டர்கள் பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவில் தரப்பில் கேட்டபோது, அச்சடித்த காலண்டர்கள் தீர்ந்துவிட்டன. புத்தாண்டு சமயத்தில் 250 காலண்டர்கள் விற்கப்படும் என்றனர். காலண்டர்களை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு விற்பதால் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்குமே. குறைந்த எண்ணிக்கையில் அச்சடித்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நடக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.