பதிவு செய்த நாள்
28
டிச
2024
05:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத உற்ஸவங்கள் டிசம்பர் 31ல் பகல் பத்து உற்சவத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு 2025 ஜனவரி 10ல் நடக்கிறது. அன்று முதல் ராப்பத்து உற்ஸவம் துவக்கமும், ஜனவரி 7 முதல் 14 வரை மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவமும் நடக்கிறது.
பகல் பத்து உற்சவம்; டிசம்பர் 31 முதல் துவங்கி ஜனவரி 9 முடிய பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 31 மாலை 4: 35 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையடுத்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம், கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்பு; மார்கழி மாத முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா 2025 ஜனவரி 10 காலை 7:05 மணிக்கு நடக்கிறது. அப்போது பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்று, மாட வீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பக்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.
ராப்பத்து உற்ஸவம்; ஜனவரி 10 முதல் 20 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி வந்து பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர் சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவையும், மறுநாள் அதிகாலை 5 30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது.
எண்ணெய்க்காப்பு உற்சவம்; 2025 ஜனவரி 7 முதல் 14 வரை எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு கோயிலிலிருந்து ஆண்டாள் புறப்பட்டு மாட வீதிகள் சுற்றி வந்து எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய்காப்பு உற்சவங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.