பதிவு செய்த நாள்
28
டிச
2024
11:12
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் பதிமூன்றாம் நாளான இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் பகாசுர வதம் திருக்கோலத்தில், புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் அருள்பாலித்தனர்.
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.