பதிவு செய்த நாள்
02
ஜன
2025
10:01
அயோத்தி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் அயோத்தியில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, சூரிய உதயத்திற்கு முன்பு நள்ளிரவில் ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில், அயோத்தியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று கடவுளை தரிசனம் செய்தனர். நேற்று மாலை முதல் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றைய பக்தர்களின் வருகையை கணக்கிட்டு பார்த்தால் 3 லட்சத்தை தாண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தையொட்டி, பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் விவசாய பணிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையின் காரணமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, என்றார் ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய். அதேபோல, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரையில் மட்டும் 3.50 லட்சம் பக்தர்கள் சுவாமி செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.