பதிவு செய்த நாள்
02
ஜன
2025
10:01
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம் பாசுரங்கள் பாடி, பகல்பத்து உற்சவ பூஜைகள் துவங்கியுள்ளன.
வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு முந்தைய, 10 நாட்கள், பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் நடைபெறும்; அடுத்த, 10 நாட்களுக்கு, இரவுப்பத்து உற்சவம் நடைபெறும். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம் விமரிசையாக துவங்கியுள்ளது. ஸ்ரீதேவி ,பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், ஆழ்வார்களுக்கு காட்சிகொடுத்து, வீற்றிருக்கின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உற்சவமூர்த்திகள், நம்பெருமாளையும், தாயார்களை நோக்கி வீற்றிருக்கின்றனர். பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை, 10:00 மணிக்கு, உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம் பாசுரங்களை பாடி, பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வரும், 9 ம் தேதி ஸ்ரீநாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) பூஜையும், 10 ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. அதிகாலை, 5:30 மணிக்கு, எம்பெருமாள், பரமபத வாசல் வழியாக பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். 1,08,000 லட்டு பிரசாதம்திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 7ம் தேதி, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், ஒரு லட்சத்து, 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. வரும், 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், வீரராகப் பெருமாள் கோவிலில் துவங்கிய, பகல்பத்து உற்சவத்தில், 2ம் நாள் நிகழ்ச்சியில் திருவாய்மொழி பாசுரம் பாராயணம் செய்யப்பட்டது.