பதிவு செய்த நாள்
07
ஜன
2025
12:01
‘தந்தை கடவுள்’ என்று போற்றப்படும் சிவனுக்கு பக்தர்கள் அதிகம். கர்நாடகாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருந்தாலும் ஒரு சில சிவன் கோவில்கள் தான் பக்தர்களின் நினைவிலிருந்து நீங்காமல் இருக்கும். அதில் ஒன்று முருடேஸ்வரா, பெங்களூரு முருகேஷ்பாளையாவில் உள்ள சிவன் கோவில்கள் மிகவும் பிரம்மாண்டமானவை. இதற்கு காரணம் இரண்டு கோவில்களிலும் சிவன் சிலை உயரமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதே காரணம். இந்நிலையில் பெங்களூரு அருகேயும் அதிகம் வெளியில் தெரியாத அழகான சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலை பற்றி பார்க்கலாம். கர்நாடகா -– தமிழகம் எல்லையில் உள்ளது ராம்நகரின் கனகபுரா. இங்கிருந்து 27 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூனசலநாதா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மலை முகட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ குட்டே ஜடே லிங்கேஸ்வரா கோவில். இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. ஜடே லிங்கேஸ்வரா என்ற முனிவர் இந்த மலையில் வந்து தவம் இருந்து, சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அவர் மரணத்திற்கு பின், கிராம மக்கள் ஒன்றிணைந்து இங்கு கோவில் கட்டினர். அடிவாரத்திலிருந்து 40 படிக்கட்டுகள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும். செல்லும் வழியில் முதலில் வருவது விநாயகர் கோவில். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு செல்லலாம். கோவில் கருவறைக்குள் சிறிய சிவன் சிலை உள்ளது. அதுபோல கோவில் வளாகத்தில் சிறிய சிவலிங்கமும் உள்ளது. மலை உச்சியில் சிவன் சிலையும் உள்ளது. இந்த கோவிலின் நடை தினமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு, கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. மலை உச்சியில் ஏராளமான மரங்கள் உள்ளன. சாமி தரிசனம் முடிந்த பின், மர நிழலில் அமர்ந்து நேரத்தை போக்கலாம். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. குடும்பத்தினருடன் அரை நாளை செலவிட ஏற்ற இடம். பெங்களூரு நகரில் இருந்து இந்த கோவில் 75 கி.மீ.,யில் அமைந்துள்ளது. காரில் சென்றால் கோவில் வாசலுக்கே சென்று விடலாம். பஸ்சில் சென்றால் கனகபுரா சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டும். -– நமது நிருபர் –-