பதிவு செய்த நாள்
07
ஜன
2025
12:01
நாம் பார்த்த நாடகங்கள், திரைப்படங்களில், ஆஞ்சநேயரை பார்த்திருப்போம். ஆனால், மீசையுடன் உள்ள ஆஞ்சநேயர் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா. ராம்நகர் மாவட்டம், சென்னபட்டணாவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் வந்தரகுப்பே கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கல் ஹனுமன் கோவிலில் 5.5. அடி உயரத்தில், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். புராணங்கள்படி, 1,000 ஆண்டுகளுக்கு முன், முனிவர் வியாசராயர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் காணப்பட்ட சிவப்பு நிறத்திலான பாறையில், ஹனுமன் உருவம் போன்று தென்பட்டது. எங்கும் வியாபித்திருக்கும் ஹனுமர், வியாசராயரின் விருப்பத்தை நிறைவேற்றி, அவருக்கு காட்சி அளித்தார். பின், அப்பகுதியில் கோவில் அமைக்கப்பட்டது.
‘கெங்கல்’ என்ற சொல் ‘கெம்பு கல்லு’ என்பதில் இருந்து உருவானது. கன்னடத்தில் ‘கெம்பு கல்லு’ என்பது ‘சிவப்பு பாறை’ என்று அர்த்தம். அதனாலே, ஆஞ்சநேயரை ‘கெங்கல் ஹனுமன்’ என்று அழைக்கின்றனர். இதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின், ஹொய்சாளா மன்னர்கள், கோவிலை பெரிதாக எழுப்பினர். அவர்களின் ஆட்சி காலம் முடிந்ததும், இக்கோவில் சிதிலமடைந்தது. 60 ஆண்டுகளுக்கு முன், கெங்கல் ஹனுமந்தய்யா முதல்வராக இருந்த போது, இக்கோவில் சீரமைக்கப்பட்டது. இக்கோவிலில் சில அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக, வடக்கு திசை நோக்கி அருள்பாலித்து வந்த ஹனுமன், தற்போது கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோவில் மற்றொரு சிறப்பும் பெற்றுள்ளது. நாட்டில் ராஜஸ்தானை அடுத்து, தென் மாநிலங்களில், கர்நாடகாவில் மட்டுமே ஆஞ்சநேயர் மீசையுடன் அருள்பாலிக்கிறார். இது கர்நாடகா மக்களுக்கு பெருமை அளிக்கிறது. குழந்தைகள் இல்லாத தம்பதி, நோய்களால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 12 வாரங்கள் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், வேண்டிய வரம் கிடைக்கிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். பொங்கல் நாளன்று, சூரிய பகவான் ஒளி, நேரடியாக ஆஞ்சநேயர் மீது விழும். இதை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 2019ல் 14 அறைகள் கொண்ட ‘யாத்ரி நிவாஸ்’ என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. இங்கு தங்க விரும்புவோர், 080 – 2991 1639 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
எப்படி செல்வது: பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், சென்னபட்டணா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் செல்லலாம். ஸ்சில் செல்வோர், சென்னபட்டணா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் செல்லலாம். – நமது நிருபர் –