பதிவு செய்த நாள்
17
ஜன
2025
03:01
குன்னூர்; குன்னூர் ஜெகதளா காரக்கொரையில், கன்னி ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். பேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி, பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டவர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து ஜெகதளா வந்தடைந்தனர். இன்று காரைக்கொரை மடிமனையில் நடந்த குண்டம் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் நடத்தி, பூசாரி மற்றும் 9 ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து, மக்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடந்தன. பல்லாயிரகணக்கான படுக மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். வரும் 20ம் தேதி மடியறை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.