பதிவு செய்த நாள்
20
ஜன
2025
03:01
சென்னை; சென்னை, வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலில், 2.15 கோடி ரூபாயில், கல்கார மொட்டை கோபுரத்தின் மீது, புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான திருப்பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளையும், வரசித்தி விநாயகர், சவுமிய தாமோதர பெருமாள் கோவில் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி உபயதாரர்கள் நிதியுதவியோடு துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில், 151 கோடி ரூபாயில், 80 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், 11 ராஜகோபுர பணிகள் முடிந்துள்ளன; மற்றவறின் பணி நடந்து வருகிறது. மேலும், 58 கோடி ரூபாயில், 197 ராஜகோபுரங்கள் புனரமைக்கும் பணியில், 94 பணிகள் நிறைவுள்ளன; 77 பணிகள் நடந்து வருகின்றன. அகத்தீஸ்வரர் கோவில் ஐந்து நிலை ராஜகோபுர கட்டுமான பணி, ஜெயபால் என்ற உபயதாரரால் செய்து தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், எம்.எல்.ஏ., வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.