பதிவு செய்த நாள்
24
ஜன
2025
03:01
பல்லடம்; முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்துவிடக்கூடாது என, திருப்பரங்குன்றம் பிரச்னை குறித்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான முருகப்பெருமான். தனது தகப்பனுக்கே பாடம் சொன்ன காரணத்தினால், சுவாமிநாத சுவாமி என்ற திருநாமத்தை பெற்றார். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்ற சிறப்பு இவருக்கு உள்ளது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ளது திருப்பரங்குன்றம். எப்பொழுது எல்லாம் தீவினை மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் முருகப்பெருமான் அவதாரம் எடுத்து தீவினைகளை அளித்ததாக ஹிந்து மத புராணங்கள் கூறுகின்றன. அதுபோல், தற்போது, திருப்பரங்குன்றத்தில் நடக்கும் செயல்கள் காதால் கேட்டாலே மனம் வருந்தும்படி உள்ளது.
எல்லா தெய்வங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கோவில்களில் அன்னதானம், பிரசாதங்கள் சாப்பிடலாம். பிரியாணி தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. முருகப்பெருமானின் மலையை கொச்சைப்படுத்தும் விதமான செயல்கள் நடந்து வருவது வன்மையாக கண்டிக்கிறோம். முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்துவிடக் கூடாது. இது ஹிந்து மக்களுக்கு வந்த பிரச்னையாகும். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு பாதயாத்திரை சென்றால் மட்டும் போதாது. அந்த பாதையில் என்னென்ன சிரமங்களை சந்திக்கிறோமோ அதுபோல், நமது ஹிந்து மதத்துக்கு வந்துள்ள பிரச்னைகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும். எதற்கும் அஞ்சாத குழந்தை முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருப்பரங்குன்றத்தில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் இனி ஒருநாளும் நடக்காமல் அவரே பார்த்துக்கொள்வார். இந்தப் பாதக செயலை கண்டித்து ஹிந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்க வேண்டும். கடவுளுடைய மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய வருத்தமான சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற மோசமான நிலை தமிழகத்தில் நடக்கக்கூடாது என, அன்னையை வணங்கி வழிபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.