பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
திருநெல்வேலி: பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சவேரியாரின் திருஉருவ பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு இஞ்ஞாசியார்புரம் தூய இஞ்ஞாசியார் பள்ளி ஜெயஜோதி திருப்பலியை துவக்கிவைத்தார். அமெரிக்கா அண்டோ மறையுரை ஆற்றினார். 7. 30 மணிக்கு பாளை., சேவியர் கல்லூரி சகாயராஜ் திருப்பலியும், வி.எம்.சத்திரம் அந்தோணியார் பள்ளி ஜோசப் கென்னடி மறையுரையும் ஆற்றினர். நேற்று மாலை நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் மதுரை மாசிலாமணி, புளியம்பட்டி குழந்தை ராஜ், பெங்களுரூ டெரன்ஸ், இருதய நகர் எரிக்ஜோ, அமெரிக்கா அண்டோ ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை ஆற்றினர். இதனையடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சவேரியார் திருவுருவப் பவனி நடந்தது. பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு சிவன்கோயில் கீழரதவீதி, மேலரதவீதி, பெருமாள் கீழரத வீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பவனியின் போது ஏராளமான கிறிஸ்தவர்கள் சப்பரத்தின் முன்னால் பேரணியாக சென்றனர். இதனையடுத்து நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் 10ம் திருநாளான இன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்துகொண்டு, திருப்பலி ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்க திருப்பலி மற்றும் கலை விருந்து நடக்கிறது. 9ம் தேதி உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது.