தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், ஒரு தை அமாவாசை அன்று காவிரி பூம்பட்டினத்தில் கடலில் குளித்துவிட்டு, திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது, அபிராமி அம்மன் சன்னிதியில், அபிராமி பட்டர் அமர்திருப்பதை கண்டு, அவர் யார் என கேட்டார். அதற்கு, அபிராமி பட்டரிடம் பொறாமை கொண்ட சிலர், அவரைப் பற்றி தவறாகக் கூற அரசன், அபிராமி பட்டரிடம் வந்து, ‘இன்று என்ன திதி?’ என கேட்கிறார். அதற்கு, ‘அபிராமியின் முகப்பிரகாசத்தை தரிசித்தபடியே, ‘இன்று பவுர்ணமி’ என்று கூறிவிடுகிறார். அதைக் கேட்ட அரசன், இன்று மாலை சந்திரன் வராவிட்டால் அவரை சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறான். நிலைமையை தாமதமாக உணர்ந்த அபிராமி பட்டர், ஸ்ரீ அபிராமியை செந்தமிழ் சொற்களால் பாட தொடங்குகிறார். 69ம் பாடலில் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள், தன் தாடங்கத்தை கழற்றி வானில் எறிய, அது முழுநிலாவாக ஒளி வீச, மன்னனோ, அபிராமி பட்டரின் கால் தொழுது மன்னிக்க வேண்டுகிறான். அதோடு, பாடல்களை அந்தாதியாக பாடி முடிக்கும்படி கேட்டுக் கொண்டு, விளைநிலங்களில் இருந்து காணிக்கு குருனி நெல் அபிராமி பட்டருக்கு வழங்கவும் உத்தரவிட்டு, அதை செப்புத்தகட்டில் பொறித்து வழங்கியதாக ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த அபிராமி அந்தாதி, தை அமாவாசையான நாளை சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பாராயணம் செய்யப்படுகிறது. ‘பாராயணம் செய்ய விரும்புவோர், கேட்போர் தாராளமாக வரலாம்’ என, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்புக்கு திரு. பாலசந்திர சிவம், 96325 060092.