வால்பாறை; வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு வசந்த பஞ்சமி திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 3ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு நடுமலை பாலத்திலிருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தில் பக்தர்கள் பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வால்பாறையின் முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் நள்ளிரவில் கோவிலில் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.