பதிவு செய்த நாள்
11
பிப்
2025
11:02
வடபழநி: தைப்பூசத்தை முன்னிட்டு வடபழநி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
வடபழநி முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூசம் விழா சிறப்பாக நடைபெறும். இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜை முடித்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் இருந்து, கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி, வடபழநியைச் சுற்றியுள்ள பகுதிகளான விருகம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் என, பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள், பால் காவடி எடுத்து வந்த நிலையில், மற்ற பக்தர்கள் புஷ்ப அலங்காரம், பன்னீர் மற்றும் அலகு காவடிகளை எடுத்து வந்தனர். அலகு குத்தி தேர் இழுத்து பிரார்த்தனையை பக்தர்கள் நிறைவேற்றினர். பக்தா்கள் கூட்டத்தை கட்டப்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம், கட்டண தரிசனத்துக்கான பக்தா்கள் தெற்கு நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோா் கா்ப்பிணி, கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் தெற்கு நுழைவாயில் சாலை வழியாக வந்து இடதுபுறம் திரும்பி மேற்கு நுழைவாயில் வழியாக தனி வழியில் வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.