பதிவு செய்த நாள்
11
பிப்
2025
04:02
பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி, மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாதசுவாமி கோயில் உள்ளது. தைப்பூசம் தீர்த்தவாரி பெருவிழாவில், இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பாடாகினர். 12 கி.மீ., தூரம் உள்ள அக்கிரமேசி கிராம எல்லை, சிறகிகோட்டை, மஞ்சகொல்லை கிராமத்திற்கு அருகில் உள்ள குண நதீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினார். அங்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் அமர்ந்தனர். தொடர்ந்து 1:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாளை சுமந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது சுற்றுவட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை சுவாமி மீது சூறை விட்டனர். இதன்படி சுவாமி, அம்பாள் மீது விளை பொருட்களை எரிந்து சமர்ப்பணம் செய்வதால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பது நம்பிக்கை. கே.வலசை, மெய்யனேந்தல் கிராமத்தார்கள் திருக்கண் மரியாதை செய்தனர். வைகை ஆற்றில் மஞ்சக்கொல்லை கிராமத்தார்கள் தீர்த்தவாரி மண்டபத்தில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் தீர்த்தவாரி நடத்தினர். பின்னர் அங்கிருந்த மக்கள் வைகை ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரம் நடந்து, மாலை 5:00 மணிக்கு நயினார்கோவில் நோக்கி சென்று கோயிலை அடைந்தார். பல்வேறு இடங்களில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.