வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்
பதிவு செய்த நாள்
12
பிப் 2025 02:02
வடபழனி முருகன் கோவிலில், நட்சத்திரப்படி தைப்பூச விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டாலும், நேற்றும் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி எடுத்து வந்தனர். 1,500 பேர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை, கவர்னர் ரவி மனைவியுடன் வடபழனி முருகப்பெருமான் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டார். வி.ஐ.பி., தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கப்படுமா?; பிரசித்தி பெற்ற கோவில்களில், விசேஷ நாட்களில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுபோன்ற திருவிழா காலங்களில், அமைச்சர்களின் உதவியாளர்கள், காவல் துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலகம், அரசு அலுவலர்கள் வாயிலாக, நுாற்றுக்கணக்கானோர் கட்டணம் செலுத்தாமல் சிறப்பு தரிசனம் செய்கின்றனர். இது, பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், வி.ஐ.பி., தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக கோவில்களிலும் தனி நேரம் ஒதுக்குவது குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. -– நமது நிருபர்-
|