பதிவு செய்த நாள்
15
பிப்
2025
08:02
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் கோயிலண்டி பகுதியில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தபோது, பட்டாசுகளை வெடித்ததால், ஊர்வலத்துக்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டன. இதில் கோவில் வளாகத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து, இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
மக்கள் சிதறி ஓடியதில், கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, விழா ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகிகளிடம் மாவட்ட வனத்துறை சார்பில், அறிக்கை கேட்கப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து கலெக்டர், வடக்கு மண்டல தலைமை வனக் காப்பாளர் ஆகியோரிடம் வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் விளக்கம் கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “யானை மிரண்டதால், மூவர் பலியான சம்பவம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சட்டம் மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த, இனி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.