பதிவு செய்த நாள்
28
பிப்
2025
12:02
பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா கடந்த, 23 ஆம் தேதி துவங்கியது. நிகழ்ச்சிக்கு, கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார். சுரேஷ்குமார் மற்றும் கோபிநாத் தலைமையில், பள்ளி மாணவர்களுக்கான வித்யாகோபால மந்திராச்சனை நடந்தது. இந்து ஐக்கிய வேதி மாநில செயலாளர் ராஜேஷ் நாதபுரம் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து நாள்தோறும், மெகா திருவாதிரை, குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் சிவராத்திரி நாளில் இரவு சிவசிறப்பு பூஜைகள், தீபாராதனை, இரவு வீட்டியாட்டு விஷ்ணு கோவிலில் இருந்து அலங்கார ரதம், தாலப்பொலி ஊர்வலம் நடந்தது. அதில், மேளக்கச்சேரி, செண்டை மேளம், தாரை தப்பட்டை, பூக்காவடி, பல்வேறு தெய்வங்களின் வேடம் அணிந்த நடனம், சிவபார்வதி புராணத்தை வெளிப்படுத்திய காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. நேற்று காலை நடை திறப்பு மற்றும் சுத்தி கலசம், சிறப்பு பூஜைகள், ஊச்சிகால பூஜை இடம் பெற்றது. தொடர்ந்து மாலையில் கொடி இறக்கம், பிரசாத வினியோகத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை நிர்வாகி சுந்தரம் தலைமையிலான கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.