பதிவு செய்த நாள்
28
பிப்
2025
12:02
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் புனித தீர்த்தம் சங்கு தீர்த்தகுளம். இங்கு வீற்றுள்ள வேதகிரீஸ்வரரை வழிபட்ட மார்கண்டேயர், சுவாமி அபிஷேகத்திற்கு பாத்திரமின்றி தவித்த போது, குளத்தில் புனித சங்கு தோன்றியது. அதில் குளத்து நீரை நிரப்பி, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். கடலின் உவர்ப்பு நீரில் மட்டுமே தோன்றக்கூடிய சங்கு, குளத்து நன்னீரில் தோன்றியது, இறை அதிசயமாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என தோன்றும் சங்கு, கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தோன்றியதும் குறிப்பிடத்தக்கது. இங்கு மட்டுமே, குளத்தில் சங்கு தோன்றும் அதிசயம் நிகழ்கிறது. இச்சூழலில், திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் அருகில் உள்ள விளாகம் பகுதியில், கோவில் அருகாமை குளத்தில், நேற்று முன்தினம் சங்கு தோன்றிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இங்கு, திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில், கிராம பொதுக்கோவிலாக உள்ளது. கோவிலின் வடக்கில், 50 மீ.,ல், ஒரு குளம் உள்ளது. அன்றிரவு 10:00 மணிக்கு, பக்தர்கள் மஹா சிவராத்திரி உற்சவ வழிபாட்டில் திளைத்திருந்தனர். அப்போது, கோவில் முன் இருந்த மண் குவியலில், ஒரு பொருள் மினுமினுப்புடன் இருந்துள்ளது. அதை எடுத்து கவனித்தபோது, சங்கு என தெரிந்துள்ளது. திருக்கழுக்குன்றம் குளத்தில் மட்டுமே சங்கு தோன்றிவரும் நிலையில், விளாகம் பகுதியிலும் சங்கு தோன்றியதால், பக்தர்கள் பரவசமடைந்தனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில்,‘சங்கு குளத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும். அங்கிருந்து நகர்ந்து கோவில் முன் இருந்திருக்கலாம். கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, சங்கில் இருந்த பூச்சியை அகற்றி குளத்தில் விட்டு, சங்கை பாதுகாத்து வழிபடுகிறோம்,’ என்றனர்.