பதிவு செய்த நாள்
28
பிப்
2025
04:02
பொன்னேரி; பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் கட்டட கலையை உணர்த்தும் வகையில் இந்த கோவில் சன்னிதியின் கருவறை சுவர் கஜபிருஷ்டம் வடிவில், கருங்கற்கள் மற்றும் செங்கற்களை கொண்டு அமைந்திருக்கும்.
பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலைத்துறை, 2020ல், 43,60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி புனரமைப்பு பணிகளை துவக்கியது. கோவிலின் பழமை மற்றும் கட்டட கலை மாறாமல், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் ஆகியோர் சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டன. சிமென்ட், கம்பி உள்ளிட்டவைகளை பயன்படுத்தாமல், சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி, பழங்கால கட்டகலையையை பின்பற்றினர். கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி, ஐந்து ஆண்டுகள் ஆனநிலையில், 50சதவீத பணிகளே நிறைவு பெற்று உள்ளன. இது பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எஞ்சிய பணிகளை துரிதமாக மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்தி பூஜைகளை தொடர வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து மெதுார் கிராமத்தை சேர்ந்த எம்.பி.சேகர் கூறியதாவது: பிரசித்தி பெற்ற இக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடக்கும். கோவில் சிதிலமடைந்தும், புனரைப்புக்காகவும் கடந்த, ஏழு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தொடர்ந்து இங்கு திருப்பணிகள் நடைபெறுவதில்லை. நாளிதழ்களில் செய்தி வரும்போது பணியை தொடர்கின்றனர். சில நாட்களில் கிடப்பில் போடுகின்றனர். தற்போது உள்ள நிலையில், கோவில் பணிகளை முடிக்க மேலும், இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களும் உடனுக்குடன் வழங்குவதில்லை. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வழிபாடுகள் நடந்து, பல வருடங்கள் ஆன நிலையில், துரிதமாக பணிகளை மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.