பதிவு செய்த நாள்
07
டிச
2012
11:12
காரைக்குடி: காரைக்குடி ஓ.சிறுவயல் டாஸ்மாக்கடை, கோயிலை ஒட்டி அமைந்துள்ளதால், அதை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல், சிவன்கோயிலின் எதிரே, டாஸ்மாக் கடை உள்ளது. கடையை ஒட்டியுள்ள ஊரணியை, அங்கு வருவோர், திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர். ஊரணியில், பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட் கிடப்பதால், பொதுமக்கள் ஊரணியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும் அருகிலேயே வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி தலைவர் அலுவலகம் உள்ளதால், இங்கு வரும் பெண்கள், அச்சப்படும் நிலை உள்ளது.
மக்கள் கருத்து.. டி.ராஜேஸ்வரி: கோயிலை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளதால், கோயிலுக்கு வர முடியவில்லை. ஒரு காலத்தில் குடிநீர் ஊரணியாக இருந்த இந்த ஊரணி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுவரை மது அருந்தி இரண்டு பேர் தண்ணீரில் விழுந்து இறந்துள்ளனர். ஓ.சிறுவயலில் உள்ள கோயில் விழாக்களில், இந்த ஊரணியில் வந்து நீராடுவோர், தற்போது வர பயப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை கண்டிப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஏ.எல்.அழகப்பன் : டாஸ்மாக் கடைக்கான உரிமம் கடந்த நவ.29ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதை அகற்ற கோரி, கலெக்டர், மாவட்ட மேலாளர், சென்னை மேலாளர், ஆகியோரிடம் முறையிட்டு எந்த பலனும் இல்லை. காரைக்குடி தாசில்தார் வந்து பார்த்து உடனே செய்து தருவதாக கூறியவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.