பதிவு செய்த நாள்
25
மார்
2025
11:03
புதுடில்லி; “பழைய டில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது, நீலி சத்ரி கோவில் இடிக்கப்படாது. அதேநேரத்தில், கோவிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது உடனே சீரமைத்துத் தரப்படும்,” என, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார். பழைய டில்லி யமுனா பஜார் நிகாம்போத் காட்டில் அமைந்துள்ள நீலி சத்ரி கோவில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருப்பதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமீபத்தில் ‘நோட்டீஸ்’ வழங்கினர். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலில் சில பகுதிகளை நேற்று இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, நேற்று கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது, வர்மா கூறியதாவது: இங்குள்ள நிலைமையை ஆய்வு செய்யவே உடனடியாக வந்தேன். கோவில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது கோவில் இடிக்கப்பட மாட்டாது. பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க டில்லி பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது. பாண்டவ சகோதரர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் கோவிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும், அது உடனடியாக சீரமைக்கப்படும். நம்பிக்கை மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க டில்லி அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.