முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2025 11:04
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி படங்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ். கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி ஓடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலின் முன் மண்டபத்தில் வைத்து கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டிகள்,ஆயிரம் கண் பானை, கரும்பாலைத் தொட்டில், உருண்டு கொடுத்தல்,முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தீமிதித்து அம்மனை வேண்டினர்.கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.டிரஸ்டிகள் ராக்கு லட்சுமணன்,பாண்டி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.