பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பெருவிழாவின் மூன்றாம் நாள், அம்பாளுடன் சுவாமி அதிகார நந்தி வாகனத்தில், மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளதால் அதிகார நந்தி என பெயர் வந்தது. சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பட வேண்டும் என, சிவ ஆகமங்கள் கூறுகின்றன.
கருடனை தடுத்த கதை; கயிலையில் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவதரிசனத்திற்கு திருமால் சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். திருமால் திரும்பிவர காலதாமதம் ஆனது. அப்போது, நந்திதேவன் அனுமதியின்றி கருடன் உள்ளே செல்ல முயன்றார். இதனால், இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார். தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். திருமால், சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் கோரினார் என்பது புராணம். எனவே, சிவ ஆலயங்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார். அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள், கைலாசத்தில்சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம்.