பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
தொண்டை மண்டலத்தில் மிகவும்பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நுழைந்ததும் விநாயகர் அருள்பாலிக்கிறார். கோபுர வாசலின் இடப்பக்கம் நர்த்தன விநாயகருடன், தில்லைக் காளியும் புடைப்புச் சிற்பங்களாக அருள்பாலிக்கின்றனர். சன்னிதி விநாயகரை அடுத்து அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மையும் தனித்தனி சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர். வெளி பிரஹாரத்தில் தெய்வயானை, வள்ளி சமேதராக ஆறுமுகப் பெருமாள் தனிக் கொடிமரத்துடன் கோவில் கொண்டுள்ளார். எதிரே, அருணகிரிநாதருக்குத் தனிச் சன்னிதி உண்டு. பக்கவாட்டில் உள்ள மண்டபத்தில் பழனி ஆண்டவர், எண்ணெய் கிடைக்காததால், தன் குருதி யால் சிவனுக்கு விளக்கேற்றி வழிபட்ட வாயிலார்நாயினாரும் தனிச் சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்.
இதைச் சுற்றி வந்து, மண்டபப்படிகளில் ஏறினால், சரபேஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி ஆகிய திருமூர்த்தங்கள் துாண்களில் புடைப்புச் சித்திரங்களாக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். காட்சி மண்டபத்தில் நின்று பார்த்தால், சன்னிதியில் கற்பகாம்பாளின் நின்ற திருக்கோலக் காட்சியை தரிசிக்கலாம். கொடிமரம், அதனடியில் நந்திகேஸ்வரர். எதிரே சுவாமிசன்னிதி. கபாலீஸ்வரரின் லிங்க சொரூபக் காட்சி. உள்பிரஹாரத்தில், தெய்வானை, வள்ளி சமேதராக சுப்பிரமணியர், சிவகாமி நடராஜர், அறுபத்து மூவர்ஆகிய திரு மூர்த்தங்கள் உற்சவர்களாக காட்சி அளிக்கின்றனர். இந்த உற்சவ மூர்த்தங்களான அறுபத்து மூவர்தான், விழாவன்று நான்கு மாடவீதிகளிலும் உலா வருவர். உட்பிரகாரத்திலேயே துர்கை, மகிஷாசுரமர்த்தினியாக கோவில் கொண்டுள்ளார். இடப்புறம்,சரஸ்வதி, துர்கா, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியர் ஒரே மேடையில் இணைந்து அமர்ந்த திருக்கோலக் காட்சி. காலபைரவர், வீரபத்திரர்,பொல்லாப் பிள்ளையார், லிங்கோத்பவர், சிவ சூரியன், அறுபத்து மூன்று நாயன்மார்கள். தட்சிணாமூர்த்தி, செல்வ விநாயகர் ஆகிய மூலவர்கள் கோவில் கொண்டுள்ளனர். சோமாஸ்கந்தர், கற்பகாம்பாள், நர்த்தன விநாயகர் ஆகியோர் உற்சவர்களாக உள்ளனர். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு வெளியே பூம்பாவை சன்னிதிஉள்ளது. இங்கு, ஸ்தல விருட்சமான புன்னை மரம், வெளி பிரகாரத்தில் உள்ளது. சனீஸ்வரருக்கு தனிச் சன்னிதியும், நவகிரக சன்னிதியும் உள்ளன. மேலும், சுந்தரரேஸ்வரர், ஜகதீஸ்வரர் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர்.