திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 03:04
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு பெரிய தேரோட்டம் நடந்தது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு கடந்த ஏப்., 3 அன்று கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வாகனங்களில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். இன்று காலை 9:30 மணிக்கு கோயில் அருகே உள்ள தேரடியில் 60 அடி உயரமுள்ள பெரிய தேரில் உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் வைக்கப்பட்டு திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் பெரிய வடத்தை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க இழுத்து வந்தனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நான்கு வீதிகளிலும் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. காலை 11:15 மணிக்கு இருப்பு நிலைக்கு தேர் வந்தவுடன் ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்ட கனிகள் பக்தர்களின் மீது வீசப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்ஸவ மூர்த்தியை வரிசையாக தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானம் நீர் மோர் பந்தல் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருந்தனர். நாளை காலை 9:00 மணிக்கு திருப்புல்லாணியில் இருந்து கருட வாகனத்தில் ஆதி ஜெகநாத பெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரை கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவில் சந்திர பிறப்பை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.