பள்ளி சகுனம் கொடுத்ததால் 9 ஆண்டுகளுக்குப் பின் நடந்த பகவதி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 11:04
நத்தம்; நத்தம் அருகே வேலம்பட்டி பகவதி அம்மன் கோவிலில் பள்ளி சகுனம் கொடுத்ததால் 9 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி ஏப்.4 நத்தம் அரண்மனை சந்தன கருப்புசாமி கோயில் மற்றும் வேலம்பட்டி பகவதி அம்மன் கோயில்களில் கிராம மக்கள் சகுனம் கேட்டனர். இரு கோயில்களிலும் பள்ளி சகுனம் கொடுத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து, 9 ஆண்டுகளுக்குப் பின் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்.6 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டு அரண்மனை சந்தன கருப்புசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவில் நேற்று கடம்பங்குளத்தில் அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க அம்மன் கரகம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் மற்றும் கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து இன்று அதிகாலை முளைப்பாரி மற்றும் மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலம்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.