சிறுவனாக இருந்தபோது வாரியார், ஒருநாள் புதுவேட்டி கட்டிக் கொண்டு அம்மா முன் வந்து நின்றார். தம்பி! ஏன் நிற்கிறாய்? கீழே உட்காரப்பா! என்றார் அம்மா. வேட்டியை இடுப்பின் மேலே உயர்த்திக் கொண்டு தரையில் அமர்ந்தார் வாரியார். இதென்னப்பா! கெட்ட பழக்கம்! வேட்டியை கீழே இறக்கி விட்டுத் தானே உட்காரணும்! என்றார் அம்மா. புதுத்துணி அழுக்காக கூடாதேம்மா! வேட்டியை விட முக்கியம் நம் மனசுதாம்ப்பா. வேட்டி அழுக்கானால் துவைத்துக் கொள்ளலாம். மனசுல தான் பொய், பொறாமை போன்ற அழுக்குப் படியாம பார்த்துக்கணும்!. அம்மாவின் அறிவுரை பசுமரத்தாணியாய் அவரது மனதில் பதிந்தது. தன் வாழ்வில் ஒழுக்கத்தையும், மனத் தூய்மையையும் கடைபிடிக்க அம்மாவின் அறிவுரை துணை நின்றதாக வாரியார் குறிப்பிடுகிறார்.