பதிவு செய்த நாள்
02
மே
2025
11:05
கேதார்நாத், சார்தாம் யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் தரிசனத்துக்காக இன்று, திறக்கப்பட்டது.
உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும். கோடை காலத்தில் மட்டுமே நான்கு கோவில்களும் திறக்கப்படும். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, சார்தாம் யாத்திரை என, அழைக்கப்படுகிறது. சார்தாம் யாத்திரையையொட்டி, கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், புகழ் பெற்ற கேதார்நாத் கோவில், இன்று காலை 7:00 மணிக்கு திறக்கப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸின் இசைக்குழு கோவில் நடை திறப்பின் போது பக்தி பாடல்களை இசைத்தனர்.
இந்த ஆண்டு முதல், புது ஏற்பாடாக, உ.பி.,யின் காசி கோவிலில் மேற்கொள்ளப்படும் கங்கா ஆரத்தி போல, இந்த கோவிலும் ஆரத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, மந்தாகினி மற்றும் சரஸ்வதி நதிகள் இணையும் பகுதியில் ஆரத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. அந்த மலர்களில் பெரும்பாலானவை, நம் நாட்டின் கொல்கட்டா மற்றும் வெளிநாடுகளான தாய்லாந்து, இலங்கை, நேபாளத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது குறிபிடத்தக்கது.