நத்தம்; நத்தம்- செட்டியார்குளத்தெருவில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் மற்றும் முழைப்பாரி கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கபட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை செட்டியார்குளத்தெரு, வெட்டுக்காரத்தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.