உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், அக்னி வசந்த விழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2:00 மணியளவில், திருவண்ணாமலை மாவட்டம், கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, ஹிந்து தர்ம சொற்பொழிவாளர் அமரேசன் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பின், கடந்த ஏப்.24ம் தேதியில் இருந்து, மே.3ம் தேதி வரை, ஒவ்வொரு இரவும், ராஜசுய யாகம், பகடை துயில், அர்ச்சுனன் வில் வளைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகங்கள் நடந்தன. இதையடுத்து, நேற்று காலை 9:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அதில், துரியோதனன், பீமன் வேடமிட்டவர்கள் துரியோதன படுகள நிகழ்ச்சியை நடித்து காட்டினர். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அதில், விரதமிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என, முழங்கியபடியே தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.