திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; நெய்தலைக்காவு பகவதி அம்மன் வருகையால் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2025 05:05
பாலக்காடு; பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா துவங்கியது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் வான வேடிக்கையும் மிகவும் பிரபலமானது. இன்று ஒத்திகை வானவேடிக்கை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.
இன்று காலை 9:00 மணி அளவில் நெய்தலைப் காவு பகவதி அம்மன் உருவச் சிலை குற்றூரில் இருந்து ஆடை ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது ஏறி வடக்கும் நாதன் சன்னிதி நோக்கி புறப்பட்டனர். செண்டை மேளத்துடன் அம்மன் வரும் வழித்தடத்தின் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். 12:00 மணியளவில் மணிகண்டனாலில் வந்தடைந்த அம்மன் கணபதி கோவில் அருகே நின்றதும் செண்டை மேளம் முழங்கத் தொடங்கின.
அதை மேளதாளத்துடன் மணிகண்டனாலின் இருந்து அம்மன் வடக்கும் நாதனின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 12:45 மணி அளவில் பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி திருச்சூர் பூரம் திருவிழா துவங்குவதாக அறிவிப்பதுடன் மூன்று நாள் கொண்ட திருவிழாவிற்கு ஆரம்பமாயின. நாளை (6ம் தேதி) காலை இதே கோபுர நடை வாயிலாக கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் பூரமத்தின் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் நாளை மாலை நடைபெறும். அதை தொடர்ந்து பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெறும். முன்னதாக விழாவையொட்டி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான "யானை சமயம்" இன்று துவங்கியது. இது நாளை நிறைவடைந்தது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.