பதிவு செய்த நாள்
07
மே
2025
10:05
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் கொடியேற்று விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த திருத்தலம் என பெயர் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா சிறப்புடன் நடைபெறும். நடப்பாண்டும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை ஒட்டி நேற்று காலை கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு பழ வகைகள், சர்க்கரை, பொங்கல் உள்ளிட்ட சீர்வரிசைகளை மேளதாளம் முழங்க எடுத்து வந்து கோவிலை வலம் வந்தனர். பின்னர், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் எழுந்தருளிய நிலையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவை ஒட்டி சிறப்பு பஜனை, அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா விழாவை ஒட்டி, இன்று அன்ன வாகனம், 8ம் தேதி அனுமந்த வாகனம், 9ம் தேதி கருட வாகனம் 10ம் தேதி சனிக்கிழமை செங்கோதை அம்மன் அழைப்பு, 11ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லாக்கு அலங்காரம், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி பரிவேட்டை, 14ம் தேதி சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.