கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா? அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2025 10:05
மதுரை; மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகரை வரவேற்று நேர்த்திக்கடனாக பார்க்கும் இடங்களில் எல்லாம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது ஆண்டுதோறும் ‘பேஷனாகி’ வருகிறது. ‘இதுபோன்று செய்வதால் நேர்த்திக்கடன் நிறைவேற்றியதற்கான பலன் கிடைக்காது’ என எச்சரிக்கிறார் அழகர்கோவில் பட்டர் பாலாஜி.
சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 12 ல் நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு செல்வார். அங்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாக சுவாமி மீது ஒரே நேரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆனால் கொரோனாவுக்கு பிறகு சுவாமி வரும் பாதையில் அவரை வரவேற்று தண்ணீர் பீய்ச்சி அடித்து வருவது அதிகரித்து வருகிறது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது குதிரை வாகனத்தில் இருக்கும் அழகர்கோவில் பட்டர் பாலாஜி கூறியதாவது: சுவாமி மீது தண்ணீர் படவேண்டும் என்பதற்காக பக்தர்கள் ‘பிரஷர் பம்பு’களை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் தண்ணீர் அதிவேகத்தில் பீய்ச்சி அடிக்கும்போது சுவாமியின் திருமேனியும், ஆபரணங்களும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தீர்த்தவாரி உற்ஸவத்தின்போது பழைய முறைபடி தோல் பையில் சிறிய குழாய் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டும். அதுவும் ராமராயர் மண்டபத்தின் முன்புதான் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். மற்ற இடங்களில் செய்தால் அதன் பலன் கிடைக்காது என பெரியவர்கள் கூறுவதுண்டு. இவ்வாறு கூறினார்.