திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சைத்ரோத்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2025 05:05
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பிரகாரத்தில் தனி சன்னதி கோயிலாக பட்டாபிஷேக ராமர் உள்ளார். இங்கு சைத்ரோத்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
சித்திரை சைத்ரோத்ஸவ விழாவை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர், சீதா பிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு விசேஷத் திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. கடந்த மே 2ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது நாள்தோறும் தொடர்ந்து 10 நாட்களுக்கு பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. இன்று உற்ஸவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்பு காலை 8:30 மணிக்கு கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்டு 60 அடி உயரமுள்ள தேரின் பீடத்தின் நடுப்பகுதியில் உற்ஸவமூர்த்திகள் வைக்கப்பட்டனர். ராமபிரான், சீதா தேவியார், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு அலங்காரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு காலை 9:30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடிக்க இழுத்து ஆரம்பித்தனர். திருப்புல்லாணியின் நான்கு ரத வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷம் முழங்க தேரை இழுத்தனர். காலை 11:30 மணிக்கு தேர் இருப்பு நிலைக்கு வந்தது. அப்போது பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு வாழைப்பழம், புளியம்பழம், மாம்பழம் உள்ளிட்ட கனிகள் வீசப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.