சபரிமலை: சபரிமலை பிரசாதமான அப்பத்தை இயந்திரமாக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு அப்பம் பிரசாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்தர்கள் வாங்கி சென்ற அப்பம் கெட்டு போய் இருந்தது. இதை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவு படி ஸ்டாக் செய்யப்பட்டிருந்த அப்ப பாக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளும் கெட்டுப்போய் இருந்ததால், ஐந்து லட்சம் பாக்கெட் அப்பம் வெளியே கொட்டி அழிக்கப்பட்டது. தயாரிப்பு முறையில் ஏற்பட்ட குளறுபடிதான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.இதை தொடர்ந்து அப்பம் தயாரிப்பை முழுமையாக இயந்திரமாக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான இயந்திரத்தை மும்பையை சேர்ந்த நிறுவனம் வழங்க உள்ளது. அரிசி பொடி, சர்க்கரை, ஏலக்காய், சுக்குப்பொடி போன்ற கலவைகளை இந்த இயந்திரமே சரியான அளவில் கலந்து அதை வேக வைத்து ஏர் பேக்கிங் செய்துவிடும். நடப்பு சீசன் முடிந்ததும் இந்த இயந்திரம் சபரிமலையில் நிறுவப்படும் என்று தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ் கூறினார். தற்போது அப்பம் தயாரிப்புக்கு மட்டும் 4500 லிட்டர் டீசல் சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படுகிறது. புதிய இயந்திரம் வரும் போது இந்த செலவும் குறைந்து விடும். ஐந்து லட்சம் பாக்கெட் அப்பம் அழிக்கப்பட்டதால் தற்போது ஒரு பக்தருக்கு இரண்டு பாக்கெட் அப்பம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.