குற்றாலம் அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்கள் அலைமோதல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
குற்றாலம்: குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் குறைவாக விழுந்துவரும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. முறையான வரிசை காணப்படாத நிலையில் அருவியில் குளிப்பதற்கு ஐயப்ப பக்தர்கள் போட்டி போடுகின்றனர்.பருவமழை பரவலாக பெய்யாத நிலையில் காட்டு பகுதிகளில் பெய்த மழையினை அடுத்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்பட்டது. தற்போது மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சுமாராக விழுந்து வருகிறது. இதனிடையில் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு அதிகமாக வருவதுண்டு. தற்போது கார்த்திகை மாதம் முடிவடையும் நிலையில் பக்தர்களின் கூட்டம் கடந்த ஒருவார காலமாக அதிகளவில் காணப்படுகிறது. விரதம் மேற்கொண்டிருக்கும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குறைவாக விழும் தண்ணீரில் போட்டி போட்டு கொண்டு குளிக்கும் நிலை தான் உள்ளது. அதிகமான கூட்டம் காணப்படும் நிலையில் குற்றாலத்தில் குளிப்பதற்கு வரிசை ஏற்படுத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போது முறையான வரிசை இல்லாததால் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களினால் அதிகமான போக்குவரத்து நெருக்கடியும், மெயினருவி, பஜார் பகுதிகளில் கடுமையான டிராபிக் ஜாமும் கடந்த இரண்டு தினங்களாக காணப்படுகிறது. இதனால் போலீசார் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.