பதிவு செய்த நாள்
13
மே
2025
11:05
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் கண்டுக்களித்தனர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவில் தெப்போற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேர் திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், சித்திரை தேர் திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் மே 5ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12ம் நாள் தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்தேர் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத தேர் வீதிகளில் உலா வந்து கட்டளைதாரர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சாமி எழுந்தருளி ஐந்து முறை குளத்தை வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டுகளித்தனர். தெப்போற்சவம் நிகழ்ச்சி முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தெப்போற்சவம் நிகழ்ச்சிக்காக கோவில் நிர்வாகத்தினர் குளத்திலிருந்த அதிகளவு நீரை கடந்த இரண்டு நாட்களாக வெளியேற்றினர். ஆனால் வருண பகவான்,நேற்று மாலை கன மழையை பொழிந்து தெப்பக்குளத்தை நிரப்பினார். பாதுகாப்பு கருதி பக்தர்கள் குறைந்த அளவில் தெப்பக்குளத்தில் அனுமதிக்கப்பட்டனர். தெப்பக்குளத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள பக்தர்கள் நிகழ்ச்சியை காண அகன்ற எல்.இ.டி திரை மூலம் தெப்போற்சவம் நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். தேவர் சமூக திருமண மண்டப அறக்கட்டளை சார்பில் தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.