பதிவு செய்த நாள்
19
மே
2025
10:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடில் திரவுபதியம்மன் சமேத தருமராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி தினமும் மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ், மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருவடிராயபுரம் முனுசாமி கவிவாசித்து வருகிறார். விழாவின் மற்றொரு நிகழ்வாக கடந்த 8ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது. இதில், கடந்த 12ம் தேதி அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞர் தபசு மரத்தில் ஏறி தவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று காலை விமரிசையாக நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். l காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பதினெட்டாம் போரில், பீமன் துரியோதனன் தொடை மீது, கதாயுதத்தால் தாக்கினார். தொடையில் இருந்து வெளியேறிய குருதியை, பாஞ்சாலி கூந்தல் மீது தடவி தன் சபதத்தை நிறைவேற்றினார். இன்று தர்மர் பட்டாபிஷேக விழா நடைபெற உள்ளது.