பதிவு செய்த நாள்
23
மே
2025
05:05
விழுப்புரம்; விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை அருகே பெண்ணைவலம் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் குழுவினர், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த அரிய கொற்றவை சிற்பம் கண்டறிந்தனர்.
ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது; பெண்ணைவலம் கிராம ஏரிக்கு அருகாமையில் துர்க்கை கோவில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் சுற்று சுவர்களும், மேலே திறந்த நிலையிலும் உள்ள இக்கோவிலில், 6 அடி உயர பலகை கல்லில், ஒரு பெண் தெய்வத்தின் உருவம் உள்ளது. 8 கைகளுடன், எருமை தலை மீது நின்றிருக்கும் அத்தெய்வம், கொற்றவை. அச்சிலையின் காதுகள், கழுத்து, கைகளை அணிகலன்கள் அணி செய்கின்றன. மார்பு கச்சை மற்றும் இடையில் ஆடை அணிந்து காணப்படுகிறது. தோளின் இருபுறமும் அம்பறாத் துாணி காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் முன்னிரு கைகளில், வலது கையை கீழே அமர்ந்து இருப்பவரின் தலைமீது வைத்த நிலையிலும், இடது கையை இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகிறார். பின்னுள்ள 5 கரங்களில், ஆயுதங்களை தாங்கி நிற்கிறார். பின் வலது கீழ்க்கரத்தில் சுருட்டிய பாம்பு காணப்படுகிறது. சிற்பத்தின் காலடியில் இரண்டு பக்கமும் அடியவர் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் இருப்பவர் கையை துாக்கி பூஜை செய்யும் நிலையிலும், வலப்புறத்தில் இருப்பவர் தனது கழுத்தை தானே அறுத்து கொற்றவைக்கு பலி கொடுப்பவராகவும் இருக்கிறார். இந்த இரண்டு உருவங்களும் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பங்களில், இது அரியதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது.
கொற்றவைக்கு இடது மேற்புறத்தில், அவளது வாகனமான மான் சிறிய அளவில் இடம்பெற்றுள்ளது. வழக்கமாக காணப்படும் கிளி இந்த சிற்பத்தில் இடம்பெறவில்லை. கடந்த காலங்களில், அப்பகுதி மக்களால் துர்க்கை என வணங்கப்பட்டு வந்துள்ள இந்த கொற்றவை சிற்பம், பல்லவர் காலம் கி.பி. 8 - 9ம் நூற்றாண்டு சேர்ந்தது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிற்பம், பெண்ணைவலம் கிராமத்தில் வெளியில் தெரியாமல் வழிபாட்டில் இருந்து வருகிறது என்று, செங்குட்டுவன் கூறினார்.