பதிவு செய்த நாள்
09
ஜூன்
2025
11:06
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், இன்று பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் வந்து மூலவரை தரிசித்தனர்.
முருக பெருமானின், அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணிகை. அசுரர்களை சூரசம்ஹாரம் செய்து, தணிகைக்கு எழுந்தருளி வள்ளிய அம்மையை மணந்து, அருள்பாலித்து வரும் திருத்தலம். அசுரர்களுடன் போர் செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை எனப் பெயர் பெற்றது. ‘குன்றுதோறாடல் என்பது முருகன் எழுந்தருளிய மலைத்தலங்களில் எல்லாவற்றிலுமே குறிக்கும். இருப்பினும்,திருத்தணிகை தலத்திலேயே தனிச் சிறப்பு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
திருத்தணிகை முருகன் திருக்கோவில்,மும்மூர்த்திகளும் வழிபட்ட தலமாகும். சிவபெருமான் பிரணவப்பொருள் மந்திரம் உபதேசிக்கப் பெறுவதற்கு முன்னர், குழந்தைக் கடவுள் முருகபெருமானை தியானித்த இடம் திருத்தணிகை. மக்கள் மெய்தீண்டல்உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செழிக்கும் என்று தந்தை சிவபெருமான் பெருமுழக்கம் செய்து சிரித்து மகிழ்ந்தார். இதனால் ,வீரஅட்டகாசர் என்றும் பெயராயிற்று.
மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தியான பெருமாள் தாரகாசுரனிடம் தனது சக்கரம், சங்கை இழந்தார். அவற்றை திருத்தணிகையில் முருகனை வழிபட்டு மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம் மலையின் மேற்கே உள்ளது. மனித அவதாரமான ராமபிரானும் இங்கு வழிபட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. ராவணனை வெல்லும் ஆற்றலையும், அருட்படைகளையும் பெற இங்கு வந்து முருகனை வழிபட்டுள்ளாராம். ராவணனை வென்ற பின்னர், மீண்டும் இங்கு வந்து முருகனை வழிபட்டு சிவஞானம் பெற்றாராம். ராவணனை விஜயம் பெற்று வந்ததனால், இங்குள்ள ராமபெருமானுக்கு விஜயராகவபெருமாள் என்ற பெயர் வந்தது.
படைக்கும் கடவுளான பிரம்மா இத்திருத்தலத்தில் முருகபெருமானை பூஜித்து, படைப்பு தொழில் செய்யும் ஆற்றலை பெற்றார். சூரபத்மனால் கவரப்பட்ட தனது செல்வங்களையும் திரும்பப் பெற்றார். கலைமகளும் முருகனை பூஜித்துள்ளார். மலையடிவாரத்தில் மலை மேல் ஏறிச்செல்லும் வழியில், பிரம்ம தேவர் உண்டாக்கிய பிரம்ம சுனை எனும் தீர்த்தம் உள்ளது.
மலைகளில் சிறந்தது திருத்தணிகை; 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் நூலில் முருகன் வழிபாடுகள் பற்றி குறிப்பு காணப்படுகிறது. சங்க கால புலவராக 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நக்கீரர் என்னும் நல்லிசைப்புலவர் பெருமான் முருகனைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் பாடிஉள்ளார். திருத்தணியைப் பற்றி பாம்பன்,குருதாசர் சுவாமிகள், வடலுார் ராமலிங்க அடிகளார், கந்தப்ப தேசிகர், கச்சியப்ப முனிவர், சிவாச்சாரியார்கள் என பலரும் போற்றிப் பாடினர். ஒவ்வொரு ஆண்டும்நடைபெறும் ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழாவில் தமிழகம் உட்பட அண்டை மாநிலங் களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, முருகபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். அதே போல் ஆண்டுதோறும் டிச., 31ம் தேதி திருப்படித்திருவிழாவை ஒட்டி முருக பக்தர்கள் திருப்புகழ் பாடல்களை பாடிக் கொண்டும், ஒவ்வொரு படியாக வணங்கி ஏறிச் சென்று முருகனை தரிசிக்கின்றனர். சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று வைகாசி விசாகம் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.