பொங்கலூர்; பொங்கலூர் தில்லை நகரில் சிவ விஷ்ணு, செல்வ விநாயகர், காசி விசுவநாதர் உடனமர் விசாலாட்சி அம்மன், சுப்ரமணியர் உடனமர் வள்ளி தெய்வானை கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை துவங்கியது. தொடர்ந்து முளைப்பாலிகை, தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதலாம் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி ஆகியன நடந்தது. நேற்று காலை நான்காம் கால வேள்வி நடந்தது. அதைத்தொடர்ந்து விமான கலசம் கும்பாபிஷேகம், மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது கும்பாபிஷேகத்தை சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மகா அபிஷேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு ஆகியன நடந்தது. அன்னதானம், தீர்த்த பிரசாதம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.