திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 05:07
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா நாமத்துடன் வடம் பிடித்தனர்.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். இக்கோவிலின் இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோத்சவம், கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான இன்று தேர்த்திருவிழா நடந்தது. காலை 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் தேரில் உற்சவர் எழுந்தருளினார். காலை 7:10 மணிக்கு, கோவிந்தா நாமத்துடன் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் மாடவீதிகளை வலம் வந்த உற்சவர் தெள்ளிய சிங்கர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. நாளை காலை, லட்சுமி நரசிம்ம திருக்கோல புறப்பாடும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை, ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வெட்டி வேர் தேர் புறப்பாடு, 13ம் தேதி இரவு 9:30 மணிக்கு நடக்கிறது. 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.