திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 06:07
திருப்புல்லாணி; ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் மங்களாசாசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர் வராக மஹா தேசிகன் சுவாமிகள் ஜூலை 5 மாலை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வந்தார்.
இன்று (ஆனி பவுர்ணமி) முதல் ஆவணி பவுர்ணமி வரை 60 நாட்கள் ஹிந்து மத துறவியர்கள் அனைவரும் ஒரே ஊரில் தங்கி இருந்து உலக நன்மைக்காக சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். அதன்படி திருப்புல்லாணியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம மடத்தில் இன்று காலை ஜீயரின் சாதுர் மாஸ்ய விரதம் துவங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வைணவ கோயில்களில் இருந்து வந்திருந்த பட்டாச்சாரியார்கள் தாம்பூலத்தட்டில் மாலை, வஸ்திரம், கனிகள் உள்ளிட்டவைகளை ஜீயரிடம் சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற்றனர். காலையில் ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் பாராயணம் நடந்தது. 11:00 மணிக்கு பஞ்ச சாந்தி ஜெபம் மற்றும் புத்தக வெளியீடு உள்ளிட்டவைகள் நடந்தன. பல்வேறு வைணவ அறிஞர்களின் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து வராக மகா தேசிகன் ஜீயரின் ஆசியுரை நிகழ்த்தப்பட்டது. மாலை 5:00 மணிக்கு ஆதி ஜெகநாதப்பெருமாள், பத்மாஸனி தாயார், பட்டாபிஷேக ராமர், ராமானுஜர், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட சன்னதிகளின் முன் சென்று மங்களாசாசனம் என்னும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாச்சாரியார்கள், ஆசிரம சீடர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.