திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்; 75 யாக குண்டம்.. 200 சிவாச்சாரியார்களுடன் யாகசாலை பூஜை துவங்கியது
பதிவு செய்த நாள்
11
ஜூலை 2025 10:07
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நேற்று மாலை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை மங்கள இசைக்குப்பின்பு ப்ரசன்னாபிஷேகம் முடிந்து சூரியனிடமிருந்து அக்னி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கலாகர்சனம், யாகசாலை நிர்மாணம் நடந்தது. தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி தற்காலிக மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், முளைப்பாரி இடுதல் முடிந்து காப்பு கட்டப்பட்டது. அத்தி மரத்தால் செய்யப்பட்ட மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி, கோவர்த்தனாம்பிகை அம்பாள் திருஉருவங்களிலிருந்து சக்தி புனித நீர் கலசத்தில் கலை இறக்கம் செய்யப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. ஜூலை 14 அதிகாலை வரை 8 கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஜூலை 14 அதிகாலை 3:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம் முடிந்து யாக சாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 5:25 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. 200 சிவாச்சாரியார்கள்; யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு 25 குண்டங்கள், சத்யகிரீஸ்வரருக்கு 9 குண்டங்கள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு ஒன்பது குண்டங்கள், கற்பக விநாயகருக்கு 5 குண்டங்கள், துர்க்கை அம்மனுக்கு 5 குண்டங்கள், ராஜகோபுரத்திற்கு 5 குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 17 குண்டங்களுமாக மொத்தம் 75 யாக குண்டங்களும், 40 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு தங்க குடங்கள், கற்பக விநாயகர், சண்முகர், துர்க்கை அம்மன், மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளி குடங்கள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமானத்திற்கும், வல்லப கணபதி விமானத்திற்கு வெள்ளி குடங்கள், 400 பித்தளை சொம்புகள், 100 பித்தளைக் குடங்களில் புனித நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படுகிறது. 96 வகையான மூலிகைகள், திரவியங்கள், ஒன்பது வகையான சமித்துகள் யாக பூஜையில் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் தலைமையில் 200 சிவாச்சாரியார்கள், 70 ஓதுவார்கள், 30 நாதஸ்வர கலைஞர்கள், 20 பேர் குருவேத பாராயணத்தில் பங்கேற்றுள்ளனர். முதல் கால யாகசாலை பூஜையை தருமை ஆதினம் நட்சத்திர குருமணி கயிலை மாசிலாமணி தேசிகர், கூனம்பட்டி ஆதினம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் துவக்கி வைத்தனர்.
|